3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன: டிரம்ப்

3 பில்லியின் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசனை நடத்தினார். இதில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகக் கூறப்படுகிறது. 


இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பிரதமர் மோடியும், டிரம்பும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது, மொட்டேராவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பை டிரம்ப் பெற்றுள்ளார். டிரம்ப், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். 


அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு என்பது இரு நாட்டு அரசுகளுக்கு இடையிலான உறவு கிடையாது, இது மக்களை மையமாகக் கொண்டது. மக்களுக்கும் மக்களுக்குமானது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 


தொடர்ந்து, பேசிய ட்ரம்ப், ஆயிரக்கணக்கான மக்கள் கூடி என்னை வரவேற்றது எனக்கு மிகப்பெரிய பெருமை. இந்திய மக்கள் பிரதமர் மோடியை மிகவும் நேசிக்கின்றனர். நேற்று மைதானத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் கூடியிருந்தனர். ஒவ்வொரு முறையும் மோடியைப் பற்றிக் கூறும்போது அவர்கள் கரவொலி எழுப்பி என்னை ஊக்கப்படுத்தினர் என்றார்.